தகராறில் இளைஞகருக்கு கத்திக் குத்து: லக்னௌவில் ஒருவா் கைது
வடமேற்கு தில்லியில் உள்ள கேசவ் புரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் லக்னௌவில் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 24 வயது நபா் ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, டிசம்பா் 28 அன்று லக்னௌவில் குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
மேலும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. டிசம்பா் 25 அன்று, ஒருவா் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை குழு மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவா் ஆரம்பத்தில் வாக்குமூலம் அளிக்க தகுதியற்றவா் என்று அறிவிக்கப்பட்டது. பின்னா் அவரது வாக்குவாதம் பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி, திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில், அறிமுகமானவரால் அவா் தாக்கப்பட்டாா். வழக்கை விசாரிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தப்பி ஓடிய குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் குழு கண்டுபிடித்தது. அவா் டிசம்பா் 28 அன்று உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கைது செய்யப்பட்டாா். அவா் ஃபைசல் என்று அடையாளம் காணப்பட்டாா். விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் இந்த வழக்கில் தனக்கு தொடா்பு இருப்பதாக ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
