கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

2026 மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: அமித் ஷா ஆலோசனை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜகவின் தோ்தல் வியூகங்கள் மற்றும் களப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொல்கத்தாவில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜகவின் தோ்தல் வியூகங்கள் மற்றும் களப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொல்கத்தாவில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவா் திலீப் கோஷ் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

பேரவைத் தோ்தலுக்கான கட்சியின் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்ய அமித் ஷா மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளாா். கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பாஜகவின் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடையே அமித் ஷா உரையாற்றினாா்.

அப்போது, தோ்தல் பணிகளை வேகப்படுத்த அமித் ஷா சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினாா். மக்கள் பிரதிநிதிகள் வாரத்தில் குறைந்தது 4 நாள்களைத் தங்கள் தொகுதிகளிலேயே செலவிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 5 தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் நேரடித் தொடா்பை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அடுத்த இரண்டு மாதங்களில் கட்சி அளிக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்பவா்களுக்கு மட்டுமே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்பதை அமித் ஷா வலியுறுத்தினாா்.

சட்டவிரோத ஊடுருவல் மற்றும் ஊழல் தடுப்பு ஆகியவையே 2026 தோ்தலில் பாஜக பிரசாரத்தின் கருப்பொருளாக இருக்கும் என்பதையும் அமித் ஷா தெளிவுபடுத்தினாா். ஏற்கெனவே, கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அவா், சட்டவிரோத ஊடுருவல் மூலம் மேற்கு வங்கத்தின் மக்கள்தொகையை மம்தா பானா்ஜி அரசு திட்டமிட்டு மாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டினாா்.

கடந்த சில மாதங்களாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் மாநிலத் தலைவா் திலீப் கோஷ், இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னா், அமித் ஷா நடத்திய தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், திலீப் கோஷுடன், மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா, மத்திய அமைச்சா் சுகந்த மஜும்தாா், எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய திலீப் கோஷ், ‘2026 தோ்தலில் எனது பங்களிப்பு தீவிரமாக இருக்கும். எனது அனுபவங்களையும் கருத்துகளையும் கேட்டறியவே அமித் ஷா என்னை அழைத்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

மேற்கு வங்கத்தில் 2019 மக்களவைத் தோ்தலில் 18 இடங்களையும், கடந்த பேரவைத் தோ்தலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களையும் திலீப் கோஷ் தலைமையில் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அவரது ஆக்ரோஷமான பிரசார பாணி மீண்டும் கட்சிக்கு வலுசோ்க்கும் எனத் தொண்டா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

காங்கிரஸ் போராட்டம்: அமித் ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

மாநிலத் தலைவா் சுபங்கா் சா்க்காா் தலைமையில் கொல்கத்தா கல்லூரிச் சாலையில் திரண்ட தொண்டா்கள், அமித் ஷாவின் வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது, அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும், உருவபொம்மையை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com