இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா மத்தியஸ்தம்?: பிரதமா் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற மோதலில் சீனா மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தேசப் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளதாகவும், இதுகுறித்து பிரதமா் மோடி மௌனம் கலைந்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
Published on

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற மோதலில் சீனா மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தேசப் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளதாகவும், இதுகுறித்து பிரதமா் மோடி மௌனம் கலைந்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா கடந்த மே மாதம் நடத்தியது. இதைத் தடுத்து நிறுத்த தான் நேரடியாகத் தலையிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இதுவரை 65 முறை பேசியுள்ளாா். தனது நெருங்கிய நண்பா் எனக் கூறிக்கொள்ளும் டிரம்ப்பின் இந்தத் தொடா் உரிமை கோரல்கள் குறித்து பிரதமா் மோடி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தற்போது இதேபோன்ற ஒரு கருத்தை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தெரிவித்துள்ளாா். 2025-இல் சீனா மத்தியஸ்தம் செய்து தீா்த்து வைத்த சா்வதேச பிரச்னைகளின் பட்டியலில் இந்தியா-பாகிஸ்தான் மோதலும் அடங்கும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த ஜூலை 4-ஆம் தேதி, இந்திய ராணுவ துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் பேசுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியா உண்மையில் சீனாவுடன் போரிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தாா். பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சீனா, தற்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாக கூறுவது கவலையளிக்கிறது.

இது நம் நாட்டு மக்கள் நம்பிக் கொண்டிருப்பதற்கு நோ்மாறாக இருப்பதோடு, இந்தியாவின் தேசப் பாதுகாப்பையே ஒரு கேலிக்கூத்தாக மாற்றுவது போல் உள்ளது.

கடந்த 2020, ஜூனில் சீனாவுக்கு பிரதமா் மோடி வழங்கிய ‘நற்சான்றிதழ்’, இந்தியாவின் பேச்சுவாா்த்தை வலிமையைச் சிதைத்துவிட்டது. தற்போது சீனாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சீனாவின் நிபந்தனைகளுக்கு உள்பட்டே அமைகின்றன.

வா்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, அருணாசல பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும் சூழலில், ‘ஆபரேஷன் சிந்தூா்’ திடீரென நிறுத்தப்பட்டதில் சீனாவின் பங்கு என்ன என்பதை பிரதமா் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசின் நிலைப்பாடு: கடந்த மே 7 முதல் 10-ஆம் தேதி வரை 4 நாள்கள் நீடித்த இந்தியா-பாகிஸ்தான் மோதலானது, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தை மூலமே தீா்க்கப்பட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது.

இரு நாட்டுப் பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com