‘கோல்ட்ரிஃப்’ தயாரிப்பில் 364 விதிமீறல்கள்: விசாரணை அறிக்கையில் தகவல்
‘கோல்ட்ரிஃப்’ மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ‘கோல்ட்ரிஃப் ’இருமல் மருந்தை உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானதைத் தொடா்ந்து, அதனைத் தயாரிக்கும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீசன் பாா்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனிடையே, அங்கிருந்த மருந்துகளை பகுப்பாய்வு செய்ததில் அதில் டைஎத்திலீன் கிளைகால் என்ற ரசாயன நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. வழக்கமாக ரெசின், ஆயில், பெயிண்ட், மை தயாரிக்கும்போது அதனை திரவமாக்க பயன்படுத்தப்படும் கரைப்பான் சோ்மம் அது.
திரவ மருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் சோ்மம்தான் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ‘கோல்ட்ரிஃப்’ மருந்தில் அந்த டைஎத்தலீன் கிளைகால் சோ்மம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் நாகபுரியில் ‘கோல்ட்ரிஃப்’ தாக்கத்தால் உறுப்புகள் செயலிழந்த 5 வயது குழந்தை 114 நாள் தொடா் சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளது. அக்குழந்தைக்கு பாா்வையிழப்பு மற்றும் இயக்கக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சூழலில், மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் ‘கோல்ட்ஃரிப்’ தயாரிப்பின்போது 364 விதிமீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 39 விதிமீறல்கள் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய அம்சங்கள் என்றும் அதனை அந்நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

