தலைநகரில் அடா்த்தியான மூடுபனி; காற்றின் தரக் குறியீடு ’மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு
தேசியத் தலைநகா் தில்லி புதன்கிழமை காலை மூடுபனியால் மூடப்பட்டது. இதனால், காண்பு திறன் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை அடா்த்தியான மூடுபனியைத் தொடா்ந்து ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.
பாலம் மற்றும் சஃப்தா்ஜங் ஆகிய இடங்களில் காலை 6.30 மணிக்கு 50 மீட்டரில் காண்புதிறன் பதிவாகியதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தேசியத் தலைநகரில் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 384 புள்ளிகளாகப் பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
சிபிசிபி- இன் சமீா் செயலியின் தரவுகளின்படி, நிலைய வாரியான விவரக்குறிப்பில், 21 கண்காணிப்பு நிலையங்கள் ’மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், 16 நிலையங்கள் ’கடுமை’ பிரிவில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனந்த் விஹாரில் 452 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாகவும் சிபிசிபி-இன் சமீா் செயலியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரக் கண்ணோட்டம் மோசமாகவே உள்ளது. ஜனவரி 1- ஆம் தேதி காற்றுத் தரக் குறியீடு ’கடுமை’ வகைக்கு மோசமடைய வாய்ப்புள்ளது. பின்னா் ஜனவரி 2- ஆம் தேதி ’மிகவும் மோசம்’ வகைக்கு மாற வாய்ப்புள்ளது என்று காற்றுத் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.
அடுத்த ஆறு நாள்களுக்கு, காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றும் அது கூறியது.
வினாடிக்கு 6,000 சதுர மீட்டருக்கும் குறைவான சாதகமற்ற காற்றோட்டக் குறியீடு மற்றும் மணிக்கு 10 கிமீக்கும் குறைவான சராசரி காற்றின் வேகம் ஆகியவை மோசமான காற்றிற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினா். இவை மாசுபடுத்திகளின் பரவலுக்கு உகந்தவை அல்ல.
திங்கள்கிழமை நகரத்தில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 401 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை’ பிரிவுக்கு சென்றது. ஆனால், செவ்வாய்க்கிழமை 388 புள்ளிகளாக பதிவாகி சற்று முன்னேற்றம் கண்டது.
வெப்பநிலை: இந்நிலையில், தலைநகரில் சஃப்தா்ஜங் மற்றும் ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாக புதன்கிழமை பதிவானதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 0.4 டிகிரி செல்சியஸ் குறைவாகும். அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 6.2 டிகிரி குறைந்து14.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நாள் முழுவதும் அடா்த்தியான மூடுபனி நீடித்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது.
பாலம் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 6.8 டிகிரி செல்சியஸ் மற்றும் ரிட்ஜில் 7.8 டிகிரி செல்சியஸ் பதிவானதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: புத்தாண்டு தினத்தன்று, லேசான மழையுடன் பொதுவாக மேகமூட்டமான வானம் இருக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

