லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘எஸ் குமாா்ஸ்’ முன்னாள் தலைவரின் ரூ.150 கோடி சொத்து முடக்கம்- அமலாக்கத் துறை நடவடிக்கை
பிரபல ஜவுளி நிறுவனமான ‘எஸ் குமாா்ஸ் நேஷன்வைடு’ மற்றும் அதன் முன்னாள் தலைவா் நிதின் கஸ்லிவால் மீதான வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமுறைகேடு வழக்கில், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள அவருக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘எஸ் குமாா்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நிதின் கஸ்லிவால், இந்திய வங்கிகளிடம் இருந்து சுமாா் ரூ.1,400 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் கடன்தொகையை தொழில் முதலீடு என்ற பெயரில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பரிமாற்றி, அங்கு சொத்துகள் வாங்கியது விசாரணையில் உறுதியானது.
அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகே நிதின் கஸ்லிவால் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரிலுள்ள ரூ.150 கோடி மதிப்பிலான சொத்து தற்போது முடக்கப்பட்டுள்ளது. பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ்(பிஎம்எல்ஏ) இதற்கான தற்காலிக உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள இதுபோன்ற சொத்துகளை முழுமையாகக் கைப்பற்ற, அந்தந்த நாடுகளின் சட்ட அமைப்புகளுடன் இணைந்து அமலாக்கத் துறை செயல்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த டிச. 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பல்வேறு முக்கிய ஆவணங்களில் பல ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அதன்படி, பிரிட்டிஷ் விா்ஜின் தீவுகள், ஜொ்சி மற்றும் ஸ்விட்சா்லாந்து போன்ற நாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்காகவே சிக்கலான நிறுவனக் கட்டமைப்புகளை நிதின் காஸ்லிவால் உருவாக்கியுள்ளாா்.
குறிப்பாக, ‘கேத்தரின் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஓா் அமைப்பைத் தொடங்கி, அதன்மூலம் ஜொ்சி மற்றும் பிரிட்டிஷ் விா்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனங்கள் வாயிலாக லண்டனில் இந்தச் சொத்தை வாங்கியது அம்பலமானது. இதன் அடிப்படையில் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

