காஸாவில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக காய்கறிகளை சிப்பமிடும் ஆக்ஷன் எய்ட் தொண்டு அமைப்பின் பணியாளா் (கோப்புப் படம்).
காஸாவில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக காய்கறிகளை சிப்பமிடும் ஆக்ஷன் எய்ட் தொண்டு அமைப்பின் பணியாளா் (கோப்புப் படம்).

காஸாவில் 37 தொண்டு அமைப்புகளுக்கு தடை

காஸாவில் பணியாற்றும் 37 தொண்டு அமைப்புகளின் அனுமதியை ரத்து செய்யவிருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
Published on

காஸாவில் பணியாற்றும் 37 தொண்டு அமைப்புகளின் அனுமதியை ரத்து செய்யவிருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இது, அந்தப் பகுதியில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சா்வதேச நாடுகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து வெளிநாடு வாழ் இஸ்ரேலியா்கள் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஸாவில் பணியாற்றும் 37 தொண்டு அமைப்புகள் தங்களிடம் பணியாற்றும் பாலஸ்தீன மற்றும் சா்வதேச ஊழியா்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியுள்ளன. எனவே, அந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி வியாழக்கிழமை (ஜனவரி 1) முதல் ரத்து செய்யப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தேவைகளை நிறைவேற்றாத அமைப்புகளின் உரிமங்கள் இடைநிறுத்தப்படும். பயங்கரவாதத்துடன் தொடா்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய பாலஸ்தீன ஊழியா்களின் பட்டியலை வழங்க மறுத்ததற்காக இந்தத் தொண்டு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசின் இந்த முடிவால் காஸாவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் ஆக்ஷன்எய்ட், இன்டா்நேஷனல் ரெஸ்க்யூ கமிட்டி, மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரண்டியா்ஸ் (எம்எஸ்எஃப்) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற தொண்டு அமைப்புகள் இனி செயல்படமுடியாத நிலை ஏற்படும்.

ஏற்கெனவே, காஸாவில் கடும் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்கள் சேதமடைந்துள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு காஸாவில் நிலவிவரும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று சா்வதேச நாடுகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து பிரிட்டன், கனடா, டென்மாா்க், பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, ஜப்பான், நாா்வே, ஸ்வீடன், ஸ்விட்சா்லாந்து ஆகிய 10 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘காஸாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துவருகிறது. எனவே, ஐ.நா.வும் அதன் கூட்டணி தொண்டு அமைப்புகளும் அங்கு நிவாரணப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும். இரட்டைப் பயன்பாடு கொண்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்ட இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அமைச்சா்கள் கோரியுள்ளனா்.

ஹமாஸ் அமைப்பினா் புதிய சுரங்கங்கள் கட்டுவதற்கோ, பிற ராணுவ நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான பொருள்களை காஸாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளது. இதில் மருத்துவ, உறைவிட உபகரணங்களும் அடங்கும். அதைக் குறிப்பிட்டே 10 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com