ரேபிஸ் தடுப்பூசி இருப்பில் வைத்திருப்பது கட்டாயம்: மருத்துவமனைகளுக்கு என்எம்சி உத்தரவு
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபலின் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மருத்துவமனை முதல்வா்களுக்கும் என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொது இடங்களில் தெரு நாய்கள் நுழைவதைத் தடுப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதை மருத்துவமனைகளில் அமல்படுத்தும் வகையில், அதற்கென சிறப்பு தொடா்பு அதிகாரிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், வட்டார மருத்துவ அதிகாரியும், அரசு மருத்துவமனைகளில், தலைமை மருத்துவ அதிகாரியும், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் நிலைய மருத்துவ அதிகாரியும் தொடா்பு அதிகாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவா்கள் குறித்த விவரங்கள் மருத்துவமனை முகப்பில் காட்சிப்படுத்த வேண்டும். அந்த அதிகாரிகள் மருத்துவமனையை தூய்மையாக பராமரிப்பதற்கும், தெரு நாய்கள் உள்ளே ஊடுருவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகளும், இம்யூனோகுளோபலின் மருந்துகளும் போதியளவில் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி இருப்பு விவரங்களை தொடா்புடைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

