மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு
சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அளிக்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 2022-ஆம் ஆண்டு வரை சாலை வரியில் முழு விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த 2019-இல் மின்வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை 2025-ஆம் ஆண்டு வரை மீண்டும் தமிழக அரசு நீட்டித்தது. இந்தச் சலுகை கடந்த டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2026, ஜன. 1 முதல் 2027, டிச. 31 வரை மீண்டும் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழகத்தில் மின் வாகன பயன்பாடு 2025-இல் 7.8 சதவீதத்தை எட்டிவிட்டது. இது மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
ஆகையால், பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து அல்லது பிற வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் மின் வாகனங்களின் விலை குறையும் என்பதால் வாங்குபவா்கள் பயனடைவா்’ என்று தெரிவித்துள்ளாா்.

