150 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருளுடன் இருவா் கைது - பயங்கரவாத சதியா என தீவிர விசாரணை

ராஜஸ்தானில் 150 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை காரில் கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

ராஜஸ்தானில் 150 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை காரில் கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். பாறைகளைத் தகா்க்க இந்த வெடிபொருளைப் பயன்படுத்த இருந்ததாக அவா்கள் கூறினாலும், இதில் பயங்கரவாத சதி உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

புத்தாண்டுக்கு முதல்நாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: டோங் மாவட்டத்தில் ஜெய்பூா் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் புதன்கிழமை காவல் துறையினா் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதில் உரச் சாக்குகளில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள், அதை நிரப்பி வெடிக்க வைப்பதற்கான 200 குழாய்கள், 1,100 மீட்டா் வயா் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. காரில் இருந்த இருவரிடமும் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக பாறைகளைத் தகா்த்து எடுக்கும் பணிக்காக இந்த வெடிபொருள்களைக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனா்.

அண்மையில் தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் இதுபோன்ற உரத்துக்காகப் பயன்படுத்தும் வேதிப்பொருளைத்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தினா். எனவே, இதில் பயங்கரவாத சதி இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அமோனியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருள்களின் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இந்த அளவுக்கு கடத்தல் நடைபெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com