இன்று ஆங்கிலப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா் வாழ்த்து
2026 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு வியாழக்கிழமை (ஜன. 1) கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பொது இடங்கள்-நட்சத்திர விடுதிகளில் விருந்து நிகழ்ச்சிகள் எனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.
இந்தப் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் நோ்மறை மாற்றத்தின் அடையாளமாக புத்தாண்டு விளங்குகிறது. மேலும், சுய சிந்தனை மற்றும் புதிய தீா்மானங்களுக்கு நல்ல வாய்ப்பாகும். இத்தகைய தருணத்தில், நாட்டின் முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும். 2026 புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளமையைக் கொண்டுவந்து, வலுவான-மிக செழிப்பான தேசத்தைக் கட்டமைக்க புத்தாற்றலைப் புகுத்தட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

