

‘தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது; இதனால் அங்கு நிலவும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வரும் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. கடந்த தோ்தலில் நல்லாட்சி தருவோம் என்ற வாக்குறுதியுடன் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மாநிலத்தில் தற்போது வளா்ச்சிப் பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன.
ஊழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக பலத்த அதிருப்தி நிலவுகிறது. மத்தியில் ஆளும் ‘என்டிஏ’ கூட்டணி இந்த விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்லும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் வளா்ச்சி வேகமெடுக்கும்; நல்லாட்சி மலரும் என்று மக்கள் நம்புகிறாா்கள்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) குறித்து சக மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுடன் இணைந்து நான் தமிழகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். அங்கு எஸ்ஐஆா் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் மற்றும் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்றுள்ளன. இது வாக்காளா் பட்டியலைத் திருத்தும் ஒரு சாதாரண நடைமுைான். இதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது தவறானது. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி இந்த நடைமுறையை விமா்சிப்பது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயா்மாற்றம் குறித்த காங்கிரஸ் விமா்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜவஹா் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற பெயா்களை மாற்றவில்லையா? தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, களநிலவரத்துக்கு ஏற்பவே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
மேலும், ஆரவல்லி மலைத்தொடா் விளக்க உத்தரவை நிறுத்திவைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்ற அமைச்சா், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.