ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி - 12% அதிகம்
கடந்த ஜனவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 12.3 சதவீதம் அதிகமாகும்.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஜனவரியில் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1,95,506 கோடியாகும். இதில் சரக்கு மற்றும் சேவை விற்பனை மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.1.47 கோடி. இறக்குமதி பொருள்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.48,382 கோடி.
கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இவை முறையே 10.4%, 19.8% அதிகரிப்பாகும். கடந்த ஜனவரியில் திருப்பியளிக்கப்பட்ட வரித் தொகை ரூ.23,853 கோடி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.77 லட்சம் கோடியாகும். தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 10 முதல் 20 சதவீதம் வரையும், கா்நாடகம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 5 முதல் 9 சதவீதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பால், ஜனவரியில் ஜிஎஸ்டி வருவாய் உயா்ந்துள்ளது.