
வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சமே தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதுதான்.
தங்களது வருவாய் இந்த அளவுக்கு இல்லையென்றாலும் பலரும் இதை வரவேற்றுள்ளனர். ஒரு நாள் இந்த வருவாய் நமக்கும் வரும் என்ற ஒரு நம்பிக்கைதான் காரணம்.
சரி, இந்த மத்திய பட்ஜெட்டில் செலவிடப்படும் தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் எவ்வாறு ஈட்டப்படுகிறது. அந்த ஒரு ரூபாய் எந்த வகைகளில் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் மேலோட்டமாகப் பார்க்கும்போது, மத்திய அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் 0.24 காசுகள் கடனாகப் பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கால் பங்கு கடனாகத்தான் வருகிறது. இதைவிடக் கொடுமை, செலவிடும் ஒரு ரூபாயில் 0.20 காசுகள் வாங்கியக் கடனுக்கு வட்டிக் கட்டப்பயன்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?
ஒரு ரூபாய் எப்படி ஈட்டப்படுகிறது?
மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 0.24 காசுகள் கடன் வாங்குவதன் மூலமும், 0.22 காசுகள் வருமான வரி மூலமும், 0.18 காசுகள் ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலமாகவும், 0.17 காசுகள் கார்ப்பரேட் வரியாகவும் 0.09 காசுகள் வரியில்லா வருவாய் மூலமும் 0.05 காசுகள் மத்திய கலால் வரியாகவும், 0.04 காசுகள் சுங்க வரியாகவும் 0.01 காசு கடனில்லா மூலதன வருவாயாகவும் ஈட்டப்படுகிறது.
ஒரு ரூபாய் செலவிடப்படுவது எப்படி?
மத்திய அரசிடம் இருக்கும் ஒரு ரூபாயில் 0.20 காசுகள் கடனுக்கான வட்டி செலுத்தவும், 0.22 காசுகள் மாநில வரிப்பகிர்வுக்காகவும் 0.16 காசுகள் மத்திய அரசின் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. மேலும் 0.08 காசுகள் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கும் 0.08 காசுகள் நிதிக்குழு செலவினங்களுக்காகவும் 0.08 காசுகள் பாதுகாப்புக்கும், 0.06 காசுகள் மானியங்களுக்கும் 0.04 காசுகள் ஓய்வூதியத்துக்கும் 0.08 காசுகள் பிற செலவினங்களுக்கும் செலவிடப்படுகிறது.
24 காசு கடன் வாங்கி, 20 காசு வட்டிக் கட்டுவதை கவனிக்கும்போது, சாதாரண மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஒத்தே மத்திய அரசின் பொருளாதாரமும் இருக்குமோ என்ற கலக்கம் மக்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.