
மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தரவு பட்ஜெட் தரவைவிட முக்கியமானது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார். பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து பட்ஜெட் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,
"உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் தரவு, பட்ஜெட் தரவைவிட முக்கியமானது. மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை பேர் காயமடைந்தனர்? எத்தனை பேரைக் காணவில்லை என அரசினால் இதுவரை சொல்ல முடியவில்லை.
உ.பி. அரசால் வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை பொய்யான தகவல். விழாவில் மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள்?
எங்கள் கட்சி இந்துக்களின் கட்சி என்று பாஜக அரசு கூறுகிறது. ஆனால் இந்துக்களின் மிகப்பெரிய விழாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. இதுதான் உங்கள் வளர்ந்த பாரதமா?
இதைவிட இந்து விரோத அரசாங்கம் ஒன்று இருக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச அரசை நம்ப முடியாததால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ராணுவத்தை அணுக வேண்டும். இதற்கு காரணமான உத்தரப் பிரதேச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்றார்.
முன்னதாக பட்ஜெட் தாக்கலின்போது மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.