கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்பு தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்பு தொடர்பான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது பக்தா்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு, சமத்துவம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கோருகிறது. அந்தவகையில், கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க, மாநில அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க கோரப்படுகிறது. பக்தா்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று கூறிவிட்டது.

மேலும், இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரரான வழக்குரைஞர் விஷால் திவாரியிடம் கேட்டுக் கொண்டது.

மகா கும்பமேளாவில், கடந்த புதன்கிழமை பிரயாக்ராஜில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரயாக்ராஜ் (உத்தர பிரதேசம்), ஹரித்வாா் (உத்தரகண்ட்), உஜ்ஜைனி (மத்திய பிரதேசம்), நாசிக் (மகாராஷ்டிரம்) ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் 3 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் நடைபெறும் கும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகும்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், உலக நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தருவதால், முறையான கூட்ட மேலாண்மை, மருத்துவ வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவம் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com