

தலைநகர் தில்லியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மரத்தடியில் அமர்ந்த கலந்துரையாடினார்.
தில்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தலும், பிப்.8ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியா போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
முக்கிய எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தில்லியில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இந்த நிலையில், தலைநகரில் திங்கள்கிழமையான இன்று பள்ளி மாணவர்களுடனான சந்திப்பை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. அந்த உரையாடலில்,
மரத்தடியில் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தை விட அதன் பிம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி அரசு தனது சொந்த பிம்பத்தைப் பாதுகாக்க, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அடுத்த வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கிறது என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏனென்றால் ஆம் ஆத்மி அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் இந்த நேர்மையற்ற வேலையைச் செய்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, புது தில்லியின் ஆர்.கே. புரத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வசந்த பஞ்சமி வருகையுடன் தொடங்கப்பட்ட வானிலை மாற்றத்தைப் போலவே, தில்லியும் வளர்ச்சியின் புதிய வசந்தத்தை அறிவிக்கும் என்று கூறினார்.
தில்லியில் சில நாள்களில் வளர்ச்சியின் புதிய வசந்தம் வரும். இந்த முறை, தில்லியில் பாஜக அரசு உருவாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 11 வருடங்களை வீணடித்துவிட்டது. தில்லி மக்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கோரிக்கை. மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிரமத்தையும் நீக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையையும் வளமாக்கும் இரட்டை எஞ்சின் அரசு தில்லியில் வரும் என்று அவர் கூறினார்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.5க்கு சத்தான உணவையும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கான நல வாரியம் அமைப்பதையும் அவர் அறிவித்தார், அதே நேரத்தில் தற்போதுள்ள எந்த நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்று உறுதியளித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஒரு நல வாரியம் அமைக்கப்படும், அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மாணவர்களின் பள்ளிக் கட்டணத்திற்கும் பாஜக அரசு உதவும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.