
மக்கள் பிரச்னைகள் சிலருக்குப் புரியவில்லை என எதிர்க்கட்சியினரை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளித்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
''குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்க மக்கள் 14வது முறையாக எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் 2025ஆம் ஆண்டில் இருக்கிறோம். 21ஆம் நூற்றாண்டின் 25 சதவீதத்தைக் கடந்துவிட்டோம். சுதந்திரத்துக்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை காலம் மட்டுமே தீர்மானித்துள்ளது.
ஆனால் குடியரசுத் தலைவர் உரையை உன்னிப்பாக கவனித்தால், அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவுக்கான நம்பிக்கை வலுவடைந்துள்ளதைக் காணலாம். வளர்ந்த இந்தியாவை நோக்கிய புதிய கனவை மக்களிடம் விதைத்துள்ளது.
25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு
தற்போதுவரை ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 12 கோடி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டின் ஏழைப் பெண்கள் பலர் பலனடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையின் தீவிரம் இதுநாள் வரை கழிப்பறையை பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையை மாற்றி பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ரூ. 40 லட்சம் கோடியை மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துயுள்ளோம். 5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது.
ஏழை மக்களின் குடிசைகளுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஏழைகளின் பிரச்னைகள் குறித்து உரையாற்றினால் அதனை விரும்புவதில்லை. மக்கள் பிரச்னைகளை அவர்களால் உணர முடியாது. சில தலைவர்கள் சொகுசு இல்லங்களில் வசிக்கவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ரூ.2,300 கோடி வருவாய்
நாட்டில் இல்லாத மக்கள் பெயரில் 10 கோடி பேர், அரசின் பல்வேறு திட்டங்களைப் பெற்று மோசடி செய்து வந்ததை அடையாளம் கண்டு அகற்றியுள்ளோம். தகுதியில்லாதவர்களின் கைகளுக்குச் செல்லாமல் குறைந்தது ரூ. 3 லட்சம் கோடியைத் தடுத்துள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை எல்.இ.டி விளக்குகள் ரூ. 400க்கு விற்பனை செய்யப்பட்டன. எங்கள் நடவடிக்கைக்குப் பிறகு ரூ. 40க்கு அவை விற்கப்படுகின்றன. இவை மின்சார சிக்கனத்துக்கு உகந்தவை. இதன்மூலம் நாட்டு மக்களின் ரூ. 20,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை. தூய்மை இந்தியா திட்டத்தை சிலர் கேலி செய்து பேசினர். ஆனால், பழைய பொருள்களை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 2300 கோடி வருவாய் கிடைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.