
நடிகை, இயக்குநர், அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட கங்கனா ரணாவத், தொழிலதிபராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹிமாசல் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்தாண்டு மக்களவை உறுப்பினரானார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே எழுதி இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். உலகம் முழுவதும் எமர்ஜென்சி படம் வெளியான நிலையில், பல்வேறு இடங்களில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், ஹிமாசல் மாநிலத்தில் இமயமலை பகுதியில் ’தி மெளண்டைன் ஸ்டோரி’ என்ற உணவகத்தை பிப்ரவரி 14 ஆம் தேதி திறக்கவுள்ளதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார்.
தனது சிறுவயது கனவு நிறைவேறவுள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
முதல் வாடிக்கையாளர் தீபிகா படுகோன்!
உணவகத்தின் முதல் வாடிக்கையாளராக தீபிகா படுகோனுக்கு கங்கனா அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, அடுத்த 10 ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு கங்கனா ரணாவத், நான் உலகத்தரம் வாய்ந்த உணவுப் பட்டியலை கொண்ட உணவகத்தை திறக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருப்பார்.
அப்போது குறிக்கிட்ட தீபிகா, நான்தான் முதல் வாடிக்கையாளர் என்று தெரிவித்திருப்பார்.
தற்போது அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, முதல் வாடிக்கையாளர் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என தீபகாவை டேக் செய்துள்ளார் கங்கனா.
மேலும், தொழிலதிபராகும் கங்கனாவின் புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.