
யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும், யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய கல்வி அமைச்சருக்கும் இதுகுறித்து முதல்வர் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் திமுக மாணவரணி சார்பில் இன்று(பிப். 6) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஒரே நாடு ஒரே மொழியைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
"ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம், தங்களுடையதைத் தவிர இந்த நாட்டில் உள்ள மற்ற அனைத்து வரலாறுகளையும் அனைத்து கலாசாரங்களையும், அனைத்து மரபுகளையும் ஒழிப்பதே என்று நான் சிறிது காலமாகவே சொல்லி வருகிறேன். அதுதான் அவர்களின் தொடக்கப்புள்ளி. அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள்.
அவர்கள் ஒரே கருத்தை, ஒரே வரலாறை, ஒரே பாரம்பரியத்தை, ஒரே மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்புவதால் அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையை ஒரே கல்விமுறையாக மாற்றும் முயற்சி இது.
இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸால் அரசியலமைப்பை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
அவர்கள் நமது மாநிலங்களைத் தாக்க முடியாது. அவர்கள் நமது கலாசாரங்கள், நமது மரபுகள், நமது வரலாறுகளைத் தாக்க முடியாது என்று புரிய வைக்க வேண்டும்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.