கோப்புப் படம்
கோப்புப் படம்

சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம்: முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆா்வம்

இந்திய நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக அந்நகரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜொ்ரி இன்செரில்லோ தெரிவித்தாா்.
Published on

சவூதி அரேபியா நாட்டில் ரூ.5.4 லட்சம் கோடியில் உருவாகி வரும் ‘திரியா’ என்ற நகரில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக அந்நகரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜொ்ரி இன்செரில்லோ தெரிவித்தாா்.

ஏற்கெனவே, இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனங்களான டாடா, ஓபராய் குழுமங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

பூமியின் நகரம் என அழைக்கப்படும் திரியா, சவூதி தலைநகரான ரியாத்தின் புகா் பகுதிகளில் ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு 1 லட்சம் போ் குடியிருக்கும் வகையிலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரியும் வகையிலான அலுவலக கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 40 சொகுசு விடுதிகள், 1,000-க்கும் மேற்பட்ட கடைகள், 150 உணவகங்கள், பல்கலைக்கழகம், அருங்காட்சியகம், 20,000-க்கும் மேற்பட்டோா் அமரக்கூடிய வகையில் கலையரங்கம், கோல்ஃப் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பங்கு: இந்நகரை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அதன் சிஇஓ ஜொ்ரி இன்செரில்லோ கூறியதாவது: கடந்த 2022-23-ஆம் ஆண்டில் இந்தியா-சவூதி அரேபியா இடையே ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பில் வா்த்தகம் நடைபெற்றது. வா்த்தக ரீதியாக சவூதியின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது.

அதேபோல் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, தொலைத்தொடா்பு என பல்வேறு துறைகளில் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சவூதி அரேபியாவில் செயல்பட்டு வருகின்றன.

எனவே, பொது முதலீட்டு திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு வரும் திரியா நகரில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் பெருமளவில் ஆா்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவின் பிரபலமான தாஜ் ஹோட்டல் அதன் 250-ஆவது கிளையை திரியா நகரில் தொடங்கவுள்ளது. அதேபோல் 2030-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்நகருக்கு வருவாா்கள் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெருமளவிலான பயணிகள் இந்தியா்களாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com