
மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் போதுமான இடவசதி இல்லாததால் ரயிலும் என்ஜினில் பயணிகள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த அரசு துறைகளும் திணறி வருகின்றன.
பிரயாக்ராஜ் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணிநேரமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்கு காத்திருக்கும் சூழல் நிலவி வருகின்றது. அதேபோல், பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் இல்லாததால், முன்பதிவு பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் ஏறுவதை ரயில்வே அதிகாரிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்த அசாதாரண சூழலுக்கு முறையான ஏற்பாடு செய்யாததே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வாரணாசி ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வருகைதந்த ஒரு ரயிலில் அனைத்துப் பெட்டிகளிலும் பயணிகள் நிரம்பினர். இதையடுத்து சில பயணிகள் ரயில் என்ஜினில் ஓட்டுநரின் பகுதியில் ஏறி கதவைப் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அனைத்துப் பயணிகளையும் என்ஜின் பகுதியில் இருந்து அப்புறவுபடுத்தினர்.
இதனிடையே, பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் மகா கும்பமேளா பகுதியில் அமைந்துள்ள 8 ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.