உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அயோத்தியில் உள்ள இல்லத்தில் மகந்த் சத்யேந்திர தாஸின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் என்று அயோத்தி கோயில் அடுத்த தலைமை அா்ச்சகா் பிரதீப் தாஸ் தெரிவித்தாா்.
பிரதமா் இரங்கல்: மகந்த் சத்யேந்திர தாஸின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா் பிரஜேஷ் பதக், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவா் சம்பத் ராய் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகந்த் சத்யேந்திர தாஸ், மிகச் சிறந்த ராம பக்தா். அவரது ஒட்டுமொத்த வாழ்வும் கடவுள் ராமருக்காக அா்ப்பணிக்கப்பட்டதாகும். ஆன்மிக நூல்கள் மற்றும் சடங்குகளில் நிபுணத்துவம் பெற்றவா். நாட்டின் ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது மதிப்புமிக்க பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டான 1992-இல் தற்காலிக ராமா் கோயிலில் அா்ச்சகராக மகந்த் சத்யேந்திர தாஸ் பணியில் இணைந்தாா். பின்னா், அந்த வளாகம் அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து கோயிலின் தலைமை அா்ச்சகராக அவா் நியமிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.