
ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்களான அனிதா பசோயா (ஆண்ட்ரூஸ் கஞ்ச்), நிகில் சப்ரானா (ஹரி நகர்) மற்றும் தரம்வீர் (ஆர் கே புரம்) ஆகியோர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜக சார்பில் மூவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களுடன் பேசுகையில்,
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தில்லியை மேம்படுத்தச் சரியான நேரத்தில் மத்தியிலும், சட்டப்பேரவையிலும், நகராட்சியிலும் டிரிபிள் எஞ்சின் அரசு அமையும். தில்லியைச் சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்றுவதற்காக கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்ததாக அவர் கூறினார்.
சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மேயர் பதவியைப் பெறுவதன் மூலம் தில்லியில் டிரிபிள் எஞ்சின் அரசை பாஜக எதிர்பார்க்கிறது. பாஜக 70 சட்டப்பேரவை இடங்களில் 48 இடங்களை வென்றது, கடந்த பத்தாண்டுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியது.
மேயர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2024 நவம்பரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தில்லி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் கவுன்சிலர்கள், ஏழு மக்களவை எம்.பி.க்கள் (பாஜகவைச் சேர்ந்தவர்கள்), மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் (ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்) மற்றும் தில்லியில் உள்ள 14 நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களாக உள்ளனர். மூன்று கவுன்சிலர்கள் இணைந்ததன் மூலம், பாஜகவின் எண்ணிக்கை, ஆம் ஆத்மி கட்சியை விட அதிகமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.