அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதா? அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங். கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்கள் விவகாரம் பற்றி..
அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதா? அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங். கண்டனம்!
ANI
Published on
Updated on
1 min read

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் போல வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செயல்படுவதா? என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி செய்தியாளர்களுடன் இன்று(பிப். 16) பேசியதாவது, “இது அவமானம் தரக்கூடிய சம்பவம், துரதிருஷ்டவசமானதும்கூட. நாட்டின் சுயமரியாதைக்கு இழுக்கும்கூட.

மெக்சிகோவும் கொலம்பியாவும் தங்கள் சொந்த விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து வரும்போது, இந்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? அந்த மக்கள் குற்றவாளிகளோ பயங்கரவாதிகளோ அல்ல. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக அங்கு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அமெரிக்காவுக்கு தவறான முறையில் சென்றிருப்பது உண்மைதான். ஆனால் வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அந்த மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு மழுப்பல் பதிலாக ‘இது அமெரிக்காவிலுள்ள நடைமுறை’ என்று அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது, அவர்(ஜெய்சங்கர்) இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சரைப் போல செயல்படாமல், டிரம்ப் அரசின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதாகவே தெரிகிறது” என்றார்.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 112 இந்தியர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இரவு வந்திறங்கியுள்ளது. அவர்களும் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com