
கேரளத்தில் கத்திமுனையில் வங்கியில் கொள்ளையடித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், சாலக்குடி அருகே உள்ள வங்கியில் வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கத்தி முனையில் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் கையுறை அணிந்து, முதுகில் பையுடன் வந்ததாகக் கூறப்பட்ட அந்த மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு, சுமார் ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ற சந்தேக நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், கடனை அடைப்பதற்காக பணத்தை திருடியதை ஆண்டனி ஒப்புக்கொண்டார்.
அவரது இல்லத்தில் இருந்தே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் மேலும் கூறினர். அவரிடம் இருந்து சுமார் ரூ. 10 லட்சத்தை மீட்ட அவர்கள், மீதமுள்ள தொகையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சூர் ஊரக காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், நன்கு திட்டமிடப்பட்ட விசாரணை, சந்தேக நபரை கண்டுபிடிக்க போலீஸுக்கு உதவியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று நாட்களுக்கு முன்பு வங்கி கிளைக்கு வந்து, பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை வங்கியில் எந்த அதிகாரிகளும் இருப்பதில்லை என்பதை நோட்டமிட்டுள்ளார் என்றார்.
வெளிநாட்டில் செவிலியராக பணிபுரியும் அவரது மனைவி அனுப்பும் பணத்தை ஆண்டனி ஆடம்பரமான முறையில் செலவு செய்து வந்துள்ளார்.
இதனால் மனைவி திரும்பி வருவதற்குள் செலவு செய்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.