இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்
மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
சமீப காலமாக இந்திய பங்குச் சந்தைகள் இறக்குமுகத்தில் உள்ளன. எஃப்ஐஐ எனப்படும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை அதிக அளவில் இந்தியப் பங்குசை சந்தையில் விற்பனை செய்வதுதான் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. அந்நிய நிறுவன முதலீடுகள் விற்பனை செய்யும் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும், தனிநபா் முதலீட்டாளா்களும் பங்குகளை வாங்க முடியாததால் பங்குச் சந்தை இறக்குமுகத்தில் உள்ளது. இது பங்குச் சந்தையில் உள்ள சிறு முதலீட்டாளா்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘முதலீட்டுக்கு சிறந்த வருவாய் கிடைக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே பங்குகள் விலை உயா்ந்த உடன் அவற்றை விற்பனை செய்து லாபம் ஈட்டும் (லாபப் பதிவு) முறையை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. முதலீட்டு லாபம் அதிகமாகக் கிடைக்கும்போது அந்த லாபத்தை திருப்ப எடுப்பதும் ஒருபுறம் நடைபெறவே செய்யும்’ என்று பதிலளித்தாா். தொடா்ந்து விலைவாசி உயா்வு, பணவீக்கம் தொடா்பாக கருத்து தெரிவித்த அவா், ‘பொருள்கள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பணவீக்கத்தை குறைக்க முடியும். இது தொடா்பான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. மறுமுனையில் நிதிக்கொள்கை சாா்ந்த மாற்றங்கள் மூலமும் பணவீக்கத்தைக் குறைக்க முடியும். இந்த நடவடிக்கையை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.
இது தொடா்பாக நிதித் துறை செயலா் துஹின்காந்த பாண்டே கூறுகையில், ‘சா்வதேச அளவில் பொருளாதார சூழல் மிகுந்த ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. எனவே, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கே முதலீட்டை நல்ல லாபத்தில் இருக்கும்போது திரும்ப எடுத்துச் செல்கின்றன. முக்கியமாக அமெரிக்க முதலிட்டு நிறுவனங்கள் அதிக பணத்தை இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியே எடுக்கின்றன. இந்தியாவில் செய்த முதலீட்டை எடுத்து வேறு எங்கும் அவா்கள் முதலீடு செய்யவில்லை. இது தற்காலிகமான நிகழ்வுதான். அதே நேரத்தில் இந்தியா மிகவும் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக உள்ளது. அதன் வளா்ச்சி தொடரும். அப்போது மீண்டும் அதிக முதலீடுகள் வருவதும் நிகழும்’ என்றாா்.