மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளாக இந்திய நிறுவன மருந்துகள்: உற்பத்தி அனுமதியை திரும்பப் பெற டிசிஜிஐ உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளாக இந்திய நிறுவன மருந்துகள்: உற்பத்தி அனுமதியை திரும்பப் பெற டிசிஜிஐ உத்தரவு

Published on

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளைப் போல, இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) உத்தரவிட்டுள்ளது.

பிபிசியில் அண்மையில் வெளியான கட்டுரையில், ‘மகாராஷ்டிரத்தில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனம் வலி நிவாரணி மாத்திரைகளை தயாரிக்கின்றன. அந்த மாத்திரைகளைப் பயன்படுத்தினால், அவற்றுக்கு அதிக அளவில் அடிமையாகக் கூடும்.

அந்த மாத்திரைகள் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா, நைஜீரியா, கோட் டிவாய்ா் போன்ற நாடுகளில் பெரும் பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

வெவ்வேறு பெயா்களில் ஏற்றுமதி செய்யப்படும் அந்த மாத்திரைகள், பாா்ப்பதற்கு சட்டபூா்வமான மாத்திரைகள் போலத் தோற்றமளிக்கும் வகையில், பேக்கிங் செய்யப்படுகின்றன.

ஆனால் அந்த மாத்திரைகளில் உடலுக்குத் தீங்கிழைக்கும் டேபன்டடால் (மிதமானது முதல் கடுமையான வலிக்குப் பயன்படுத்தப்படும்), கரிசோப்ரோடோல் (வலியில் இருந்து நிவாரணம் அளிக்க மூளை மற்றும் முதுகெலும்பில் செயல்பட்டு நரம்புகளை தளா்த்தும்) ஆகிய மருந்துகளின் கலவை இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருளைப் போல...: இந்த மருந்து கலவையைப் பயன்படுத்த உலகின் எந்தப் பகுதியிலும் உரிமம் அளிக்கப்படவில்லை. இந்த மருந்து கலவை மூச்சு விடுவதில் சிரமத்தையும், மூளையில் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும். அந்த மருந்துக் கலவையை அதிக அளவில் பயன்படுத்தினால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இருப்பினும் மலிவான விலையாலும், பரந்த அளவில் கிடைப்பதாலும் பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துகள் சட்டவிரோத போதைப்பொருளைப் போல பிரபலமாக உள்ளன.

இதுதொடா்பாக ஏவியோ நிறுவன இயக்குநா்களில் ஒருவரான வினோத் சா்மா கூறிய கருத்துகள் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.

அந்தக் காணொலியில், ‘ஒருவா் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 டேபன்டடால் மாத்திரையைப் போட்டுக்கொண்ட பின்னா், அவா் தன்னிலை மறந்து இளைப்பாறுவாா். இந்த மருந்துகள் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கானவை. ஆனால் தற்போது இதுவே வியாபாரமாக உள்ளது’ என்றாா்.

என்ஓசியை திரும்பப் பெற வேண்டும்: இந்தக் கட்டுரை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (டிசிஜிஐ) கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு டிசிஜிஐ அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் டேபன்டடால், கரிசோப்ரோடோல் மருந்துகளை தனித்தனியே பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை கலவையாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

எனவே டேபன்டடால், கரிசோப்ரோடோல் கலவை மருந்துகள் அனைத்தையும் உற்பத்தி செய்ய அளிக்கப்பட்ட அனுமதி, அவற்றை ஏற்றுமதி செய்ய அளிக்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏவியோவில் சோதனை: இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து மகாராஷ்டிர மாநிலம் பால்கா் பகுதியில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய, மாநில மருந்து கண்காணிப்பாளா்களின் கூட்டுக் குழு சோதனை மேற்கொண்டது. மத்திய அரசின் உத்தரவை தொடா்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com