ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம்! இருந்தும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது ஏன்?

ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம் என்ற போதிலும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது பற்றி
அமெரிக்க ராணுவ விமானம்
அமெரிக்க ராணுவ விமானம்
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, ராணுவ விமானம் மூலம் அவரவர் நாடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது டிரம்ப் நிர்வாகம்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டவா்களை நாடு கடத்துவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 332 இந்தியா்கள் 3 கட்டங்களாக பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு நேரடியாக வந்தடைந்தனா். இவா்கள் அனைவரும் கை-கால்களில் விலங்கிடப்பட்டு, அழைத்து வரப்பட்டது சா்ச்சையானது.

இந்நிலையில், நாடு கடத்தப்படும் அடுத்தடுத்த குழுவினா், மத்திய அமெரிக்க நாடுகள் வழியாக சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்ப அமெரிக்கா ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 299 போ், 3 விமானங்களில் பனாமா நாட்டுக்கு கடந்த வாரம் வந்தடைந்தனா். இதில் இந்தியா்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருப்பதாக அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கு பனாமா அரசு தகவல் அளித்துள்ளது. இதையடுத்து அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்த ராணுவ விமானம் பயன்படுத்தப்படுகிறது. அண்மையில், இந்தியர்களுடன் மூன்று முறை அமெரிக்க ராணுவ விமானம் வந்து சென்றதற்கான செலவு மட்டும் ரூ.8.67 கோடி என்கிறது ஏஎஃப்பி தகவல். அதாவது, சாதாரண பயணிகள் விமானத்தை இயக்குவதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக செலவாகும் இந்த ராணுவ விமானங்களை இயக்குவதற்கு.

அமெரிக்க ராணுவ விமானம்
உங்களுக்கு 'பி' ரத்த வகையா? ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்!

இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க ராணுவ விமானமே அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு சாதாரண விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்துக்கு 8,577 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றால், இதே ராணுவ விமானத்துக்கு ஒரு மணி நேரம் இயக்க 28,562 அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறதாம்.

ராணுவ விமானங்களுக்கு என தனி விமானப் பாதை பயன்படுத்தப்படுவதாலும், விமான நிலையங்களில் அல்லாமல், ராணுவ விமானப் படைத்தளங்களில் மட்டுமே எரிபொருளை நிரப்ப முடியும் என்பதால், அதற்கான செலவினங்களும் அதிகமாம். இதனால், ஒரு நபரை வெளியேற்ற அமெரிக்கா செலவிடும் தொகை ரூ.8.50 லட்சம். இதுவே, அமெரிக்காவிலிருந்து புது தில்லி வரும் விமானத்தில் பிசினஸ் வகுப்புக்கான இறுக்கையே வெறும் ரூ.3.50 லட்சத்தில் கிடைத்துவிடும்.

காரணம் என்னவென்றால், சாதாரண பயணிகள் விமானத்தில், நாடு கடத்துவோரை ஏற்றிச் சென்று அது விபத்துக்குள்ளானால், அது இரு நாட்டுப் பிரச்னையாக மாறிவிடும். வெளிநாட்டு குடிமக்களை அமெரிக்கா கொன்றுவிட்டதாக வழக்குத் தொடரவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுமாம். அதனைத் தடுக்கவே மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் செலவு செய்து ராணுவ விமானத்தில் வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறது அமெரிக்கா.

அது மட்டுமல்ல, வழக்கமாக, அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் விமானப் பயண நேரத்தை விடவும் இந்த பயண நேரம் 12 மணி நேரம் அதிகமாக இருக்கிறதாம். அதனால்தான் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானங்கள் இந்தியா வந்தடைய 48 மணி நேரத்துக்கும் மேல் ஆவதாக அதில் வரும் மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

எனவே, வெளியாகியிருக்கும் தகவல்களின்படி பார்த்தால், ஒரு கோடி வரை செலவு செய்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய மக்களை கிட்டத்தட்ட ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரை செலவிட்டு நாடு கடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com