
ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள்தொகையை விட மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 24) தெரிவித்தார்.
காட்டுமிராண்டித்தனமான அரசு என வர்ணிக்கப்பட்ட தலைவர்கள் நமது பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பதாகவும், அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பிகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், மகா கும்பமேளாவின் சிறப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
''ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்தப் புனிதமான நிகழ்வை காட்டுமிராண்டி அரசை (லாலு பிரசாத் யாதவைக் குறிப்பிட்டு) நடத்திய தலைவர்கள் விமர்சிக்கின்றனர். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் தற்போது மகா கும்பமேளாவை விமர்சிக்கும் வாய்ப்பை எடுத்துக்கொள்கின்றனர். பிகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் காப்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது. இதன்மூலம் வளமான எதிர்காலத்தை இந்த ஆட்சி உறுதி செய்யும். ஆனால், காட்டுமிராண்டித்தன ஆட்சி நடத்துபவர்கள் தொடர்ந்து நமது பாரம்பரியத்தை வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
மகா கும்பமேளா நிகழ்வு தேவையற்ற ஒன்று எனவும், இதன்மூலம் மக்களுக்கு இன்னல்களே மிஞ்சுவதாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
மேலும், மகா கும்பமேளாவானது மரண கும்பமேளாவாகியிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்திருந்தார். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றவில்லை: பாஜக விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.