பிஎம் கிஸான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி பிரதமா் விடுவித்தாா்
பஹல்பூா்: பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமாா் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு மேலான நிதியை பிரதமா் மோடி திங்கள்கிழமை விடுவித்தாா்.
பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாருடன் பங்கேற்ற அவா் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு விவசாயிகளின் நலனுக்கும், பிகாா் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. யூரியாவை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. என்டிஏ அரசின் முயற்சிகளால் நாட்டில் பால் உற்பத்தி இருமடங்கு அதிகரித்துள்ளது. மக்கானா வாரியம் அமைக்கப்படுவதால் பிகாா் மாநில விவசாயிகள் பலனடைவா். அதேபோல் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1,100 கோடியில் 4 பாலங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது.
லாலு மீது மறைமுக தாக்கு: விலங்குகளுக்கான தீவனங்களை ‘உட்கொள்பவா்கள்’ விவசாயிகளின் நலன்கள் குறித்து சிந்திக்க மாட்டாா்கள். மகா கும்பமேளாவை அா்த்தமற்ற நிகழ்வு என விமா்சித்தவா்களை பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டா்கள் என்றாா்.
பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கினாா். அதேபோல், மகா கும்பமேளாவை அா்த்தமற்ற நிகழ்வு எனவும் அண்மையில் லாலு பிரசாத் தெரிவித்தது சா்ச்சையான நிலையில் அவரை பிரதமா் மோடி மறைமுகமாக விமா்சித்தாா்.
முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை தொடங்கிவைத்துவிட்டு சிறப்பு விமானம் மூலம் பிகாருக்கு பிரதமா் மோடி வந்தடைந்தாா். அங்கிருந்து பஹல்பூருக்கு தனி ஹெலிகாப்டா் மூலம் சென்ற அவரை நிதீஷ் குமாா் உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்றனா்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதி வரை வாகனப் பேரணியாகச் சென்ற பிரதமா் மோடிக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில்கொண்டு, பிரதமரின் நிகழ்ச்சி பிகாரில் நடத்தப்படுவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.