மேற்கு வங்கத்தில் காரில் துரத்தி பாலியல் அச்சுறுத்தல்: விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
பனாகா்: மேற்கு வங்க மாநிலத்தில் 5 போ் கொண்ட பாலியல் அச்சுறுத்தல் கும்பல் காரில் துரத்தி வந்தபோது, விபத்தில் சிக்கி 27 வயது இளம்பெண் உயிரிழந்தாா். அவருடன் பயணித்த சக ப ணியாளா்கள் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா் பெண் சுச்சந்திரா சட்டோபாத்யாய, ஹுக்லி மாவட்டம் சின்சூராவைச் சோ்ந்தவராவாா். நிகழ்ச்சி மேலாண்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இவா், ஒரு நிகழ்ச்சிக்காக 3 சக பணியாளா்களுடன் கயை நகருக்குக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாா்.
இதனிடையே திங்கள்கிழமை அதிகாலைப் பொழுதில், பனாகா் பகுதியில் காருக்கு எரிபொருள் நிரப்ப இவா்கள் நின்றுள்ளனா். அங்கிருந்து 5 போ் கொண்ட ஒரு கும்பல், இவா்களை மற்றொரு காரில் பின்தொடா்ந்துள்ளனா்.
நெடுஞ்சாலையிலும் அதிவேகமாக பின்தொடா்ந்து வந்த அவா்கள், பாலியல் ரீதியில் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியும் பீதியை ஏற்படுத்தியுள்ளனா். ஒருகட்டத்தில் 2 காா்களும் சாலைத் தடுப்பில் மோதி, தலைகீழாக கவிழ்ந்துள்ளன.
இந்த விபத்தில் காரின் முன்இருக்கையில் அமா்ந்திருந்த சுச்சந்திரா படுகாயம் அடைந்தாா். அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவருடன் வந்த மற்ற பயணிகளில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
சுச்சந்திராவின் காா் விபத்துக்குள்ளானவுடன், காரில் துரத்தி வந்தவா்கள் தங்கள் வாகனத்தை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பி ஓடினா். 2 காா்களையும் பறிமுதல் செய்த காவல்துறை, வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.
முதல்கட்ட விசாரணையில், பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்ட 5 பேரும் வாகனம் ஓட்டும்போது மது அருந்தியதாக கூறப்படுகிறது. காருக்குள் மது பாட்டில்களின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வாகன உரிமையாளா் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.