
நமது நிருபா்
பலவீனமான கொள்கைக் கட்டமைப்பு தொடங்கி குறைபாடுள்ள அமலாக்கம் வரையிலான பல்வேறு காரணங்களால் 2021-2022-ஆம் ஆண்டைய கலால் கொள்கையால் தில்லி அரசு ரூ.2,000 கோடிக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது என்று தில்லி சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்குத் தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப் பேரவையில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
அந்த அறிக்கைகளில் ஒன்றில் மதுபான உரிமங்களை வழங்கும் செயல்பாட்டில் விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ள மதுபானக் கொள்கையை உருவாக்குவதற்கான மாற்றங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நிபுணா் குழுவின் பரிந்துரைகளை அப்போதைய துணைமுதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா புறக்கணித்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இணக்கமில்லாத நகராட்சி வாா்டுகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சரியான நேரத்தில் அனுமதி பெறப்படவில்லை. இதனால், ரூ.941.53 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இணங்காத பகுதிகள் என்பது மதுபானக் கடைகளைத் திறப்பதற்கான நில பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்காத பகுதிகள் ஆகும்.
உரிமங்கள் ஒப்படைக்காததாலும் மறு டெண்டரில் துறை தோல்வியடைந்ததாலும், இந்த மண்டலங்களின் உரிமக் கட்டணம் காரணமாக கலால் துறைக்கு சுமாா் ரூ.890.15 கோடி இழப்பு ஏற்பட்டது. கோவிட் தொற்றுநோய் தொடா்பான மூடல் காரணமாக உரிமதாரா்களுக்கு ஒழுங்கற்ற மானியம் விலக்கு அளித்ததாலும் ரூ.144 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இணங்காத பகுதிகளில் மதுபானக் கடைகள் திறப்பதை தில்லி மாஸ்டா் பிளான்-2021 அனுமதிக்கவில்லை. ஆனால், கலால் கொள்கை 2021-22, ஒவ்வொரு வாா்டிலும் குறைந்தது இரண்டு சில்லறை விற்பனைக் கடைகளைத் திறப்பதை கட்டாயமாக்கியது.
புதிய கடைகளைத் திறப்பதற்கான டெண்டா் ஆவணத்தில், இணங்காத பகுதியில் மதுபானக் கடைகள் இருக்காது என்று கூறப்பட்டிருந்தது. ஒரு கடை இணங்காத பகுதியில் இருந்தால், அதை அரசின் முன் ஒப்புதலுடன் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தது.
மேலும், இணக்கமற்ற பகுதிகளில் முன்மொழியப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான வழிமுறைகளை வகுப்பதற்கு கலால் துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. டிடிஏ, எம்சிடி அமைப்புகளிடமிருந்து கருத்துகளைப் பெறாமல் ஜூன் 28, 2021 அன்று ஆரம்ப டெண்டா் விடப்பட்டது.
இந்தப் பிரச்னை தீா்க்கப்படுவதற்கு முன்னரே ஆகஸ்ட், 2021-இல் உரிமங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும், மதுபான விற்பனை நிலையங்கள் நவம்பா் 17, 2021 முதல் செயல்படத் திட்டமிடப்பட்டன. இதற்கிடையில், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) நவம்பா் 16, 2021 அன்று இணக்கமற்ற பகுதிகளில் விற்பனை நிலையங்களை அனுமதிப்பதில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. அதன் பின்னா், உரிமதாரா்கள் உயா்நீதிமன்றத்தை அணுகினா்.
டிசம்பா் 9, 2021 அன்று, 67 இணக்கமற்ற வாா்டுகளில் கட்டாய மதுபான விற்பனை நிலையங்கள் தொடா்பாக எந்தவொரு உரிமக் கட்டணத்தையும் செலுத்துவதிலிருந்து நீதிமன்றம் உரிமதாரா்களுக்கு விலக்கு அளித்தது. இதன் விளைவாக மாதத்திற்கு ரூ.114.50 கோடி உரிமக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஒப்பந்தப்புள்ளி அழைப்பதற்கு முன் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படாததால் இந்த விலக்குக்கு வழிவகுத்தது என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், பலவீனமான கொள்கை கட்டமைப்பு முதல் கொள்கையை சரியாக அமல்படுத்தாதது வரை பல சிக்கல்கள் காரணமாக தோராயமாக ரூ.2,002.68 கோடி ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக சிஏசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.