நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நாடு கடத்தப்பட்டவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

ஹரியானா முன்னாள் முதல்வரும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சருமான மனோகர் லால் கட்டார் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை விமர்சித்துப் பேசியுள்ளார்.

நாடுகடத்தப்பட்ட மக்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் கட்டாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”ஒரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் குற்றவாளிகள். அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது. இதற்கு எதிராக அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டாலும் நமது மக்கள் மீண்டும் அதே தவறை செய்கின்றனர். இது போதைப் பழக்கத்தைப் போன்று தவறானது. நாம் ஏன் அவர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டும்?” என்றார்.

மேலும், “அவர்கள் எவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் என்ன? அவர்களுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது என்பதே எங்களின் கவலை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்பட்ட 333 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களை அமெரிக்கா அவமதித்ததற்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவிக்காததைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் பேசிய கட்டார், “ஹரியானாவின் கர்னாலில் உள்ள டாப்ரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றனர். கடந்தாண்டு மக்களைவைத் தேர்தலின்போது அந்த கிராமத்திற்குச் சென்றேன். அந்த கிராமத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே அரசு ஊழியர் என்பது அதிர்ச்சியளித்தது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்று பயணம் செய்வது ஆபத்தானது” என்று தெரிவித்தார்.

நாடு கடத்தப்பட்டவர்களிள் 113 பேர் ஹரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கர்னல், கைதல், ஹிசார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பயண முகவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். மேலும், குருக்ஷேத்ராவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் அமெரிக்கா செல்ல ரூ.1.20 கோடி வரை செலுத்தியுள்ளனர்.

ஹரியானா காவல்துறை பயண முகவர்கள் மீது மாநிலம் முழுவதும் சுமார் 20 குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com