இயர்ஃபோன் பயன்படுத்தலாம்? ஆனால்..
இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
காது மற்றும் கேட்புத் திறனில் மீண்டும் சரி செய்யவே முடியாத பிரச்னைகளை இந்த இயர்ஃபோன், ஹெட்ஃபோன்கள் ஏற்படுத்திவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை பொது இயக்குநர் அதுல் கோயல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இயர்ஃபோன் போன்றவற்றை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தும்போது காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும் ஒரு நாளில் அதிகபட்சமாகவே இரண்டு மணி நேரத்துக்கு மேல் இயர்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்றும், அதையும் தொடர்ந்து பயன்படுத்தாமல், இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாமல், தொடர்ந்து காதுகளில் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு அதிக சப்தத்துடன் பாடல் கேட்பது, பேசுவது போன்றவற்றில் ஈடுபடும்போது, முதலில், காதின் கேட்கும் திறன் அதாவது துல்லியத்தன்மை குறைகிறது. பிறகு தொடர்ந்து இயர்ஃபோனை பயன்படுத்தும்போது காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. ஆனால், அதனை ஒருவரால் மீண்டும் சரி செய்ய முடியாது என்பதுதான் துயரம். அதிலும், நாள்தோறும் இவ்வாறு காதுகள் கேட்கும் திறனை இழக்கிறது என்பதைக் கூட ஒருவரால் அறிந்துகொள்ள முடியாது என்கிறார்கள்.
வேறு வழியே இல்லை, பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பவர்கள் மட்டும் அதுவும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மட்டும் இயர்ஃபோனை பயன்படுத்தலாம். ஆனால், வீட்டில் இருப்பவர்கள், வெறுமனே அரட்டை அடிக்க இயர்போனைப் போட்டுக்கொண்டு பேசுவதைத் தவிர்த்து, மெல்லிய சப்தத்தில் ஸ்பீக்கர் வைத்துக்கொண்டு பேசலாம் என்பதே நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.