ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

ஆக்ராவில் மனைவி மீது நேரலையில் குற்றம் சாட்டிய ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட மானவ் சர்மா/ அவரது மனைவி நிகிதா சர்மா.
தற்கொலை செய்துகொண்ட மானவ் சர்மா/ அவரது மனைவி நிகிதா சர்மா.
Published on
Updated on
2 min read

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ் சர்மா (30). ஐடி ஊழியரான இவர் நிகிதா சர்மா என்ற பெண்ணை ஜனவரி 30, 2024 அன்று திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்தவுடன் மானவ் தனது மனைவியுடன் மும்பை சென்று வசித்தார். ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது. சில மாதங்களில் மானவுக்கும் நிகிதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதத்தில் மானவ் குடும்பத்தினர் மீது பொய்வழக்குப் போடவிருப்பதாக நிகிதா கூறியுள்ளார். மேலும், மானவ்வை பிரிந்துசென்று தனது காதலனுடன் வாழ்விருப்பதாகவும் நிகிதா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப். 23 அன்று இருவரும் ஆக்ரா சென்றுள்ளனர். அங்கு நிகிதாவின் வீட்டிற்கு சென்றபோது மானவ் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரக்தி மனநிலையில் தனது வீட்டிற்கு வந்த மானவ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்கான காரணத்தை நேரலையில் பதிவுசெய்த அவர், பிப். 24 அன்று காலை 5 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

மானவ் பதிவு செய்த நேரலையில் அவரது மனைவி நிகிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ”தனிமையில் இருக்கும் ஆண்களைக் குறித்து நினைத்துப் பார், என் இறப்பிற்கு பின் யாரும் எனது பெற்றோரைத் தொடாதே” என்று தெரிவித்துள்ளார்.

6.57 நிமிடங்கள் கொண்ட அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, நிகிதா ஷர்மா தனது கணவரின் விடியோவுக்கு மறுப்புத் தெரிவித்து விடியோ வெளியிட்டார். அதில், ”மானவ் குறிப்பிட்டிருப்பது எனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியே. அதுகுறித்து அவருக்குத் தெரியவந்தபோது அவர் என்னை மிகவும் திட்டினார். என்னிடம் மோசமாக நடந்துகொண்டார். அவர் அதிகமாக மது அருந்துவார். அதுமட்டுமின்றி இதற்கு முனரும் பலமுறை அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். நான் அதை மூன்று முறை தடுத்து நிறுத்தியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மானவ் தற்கொலை செய்துகொண்ட நாளில் நிகிதா மானவ்வின் சகோதரியிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்று அவர் கூறிய நிலையில், மானவ்வின் தந்தைக்கு அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று நிகிதா விடியோவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரியான மானவ்வின் தந்தை நரேந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் தளத்திலும் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

மானவ் உடலின் பிரேத பரிசோதனை பிப். 24 அன்று நடைபெற்றது. ஆனால், அப்போது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இருவரின் வாக்குமூலங்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com