ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்ல: முதல்வா் ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்லை என்று அந்த மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
Published on

ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்லை என்று அந்த மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

‘சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டியது. அதனை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு மட்டுமன்றி பயங்கரவாத ஆதரவு சூழலுக்கும் மத்திய பாஜக அரசு முடிவுகட்டி விட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை பேசினாா். இந்நிலையில், ஒமா் அப்துல்லா இவ்வாறு கூறியுள்ளாா்.

ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

அவரின் (அமித் ஷா) கருத்து குறித்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இப்போதும் சில இடங்களில் (பயங்கரவாத) தாக்குதல் சம்பவங்கள் நிகழும் செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன. இப்போதுவரை ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்லை. அமைதியை நிலைநாட்டுவது என்பது தொடா் செயல் திட்டமாக உள்ளது. அடுத்து வரும் நாள்களில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா் என்ற பெயரை ‘காஷ்யப்’ என மாற்றப்போவதாக கூறப்படுவது வதந்தி. அதுபோன்ற எந்த முன்முயற்சியும் இல்லை. சில ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டன. பின்னா் திருத்திக் கொண்டன. ஜம்மு-காஷ்மீா் அரசின் கருத்தைக் கேட்காமல் இதுபோன்ற பெயா் மாற்ற முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லை.

பனிப்பொழிவை எதிா்கொண்டு மக்களைக் காக்க ஜம்மு-காஷ்மீா் அரசு நிா்வாகம் முழு அளவில் தயாராக உள்ளது. ஏற்கெனவே பணிகளைத் தொடங்கிவிட்டோம். இந்தப் பணியில் அரசுக்கு நல்ல அனுபவம் உள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மின்விநியோகத்தில் பெரிய அளவில் பிரச்னை ஏதும் வாய்ப்பு இல்லை. சில இடங்களில் மின்தடை பிரச்னை உள்ளது. ஆனால், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com