
பெங்களூருவில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் வழிமாறிச் சென்றதால் பெண் பயணி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மீது பெங்களூரு காவல்துறையில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஹோரமாவில் இருந்து தனிசந்திரா வரை வியாழக்கிழமை இரவு பெண் ஒருவர் ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் ஆட்டோ பதிவு செய்துள்ளார்.
அந்த ஆட்டோவின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்த நிலையில், ஹெப்பல் அருகே தவறான பாதையில் சென்றுள்ளார். பெண் பயணி சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சென்றதால், தப்பிக்கும் நோக்கில் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில்,
”நம்ம யாத்ரி செயலியில் அவசரத்துக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளும் வசதி இல்லை, 24 மணிநேரம் காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது, அவசர சூழலில் பெண்கள் எவ்வாறு காத்திருக்க முடியும். பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் புகாருக்கு பதிலளித்த நம்ம யாத்ரி நிறுவனம், உங்கள் மனைவிக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துகிறோம், அவர் நலமுடன் இருக்கிறார் என நம்புகிறோம், பயணம் குறித்த தகவலை எங்களுக்கு பகிருங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.