
சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐசிஎம்ஆர் நடத்தும் தொடர்ச்சியான ஆய்வகக் கண்காணிப்பின்போது இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் முழுவதும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்எம்பிவி பாதிப்பு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் இந்த வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதற்கும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?
இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று மாத பெண் குழந்தைக்கும், எட்டு மாத ஆண் குழந்தைக்கும் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், நிமோனியா காய்ச்சல் அறிகுறிகளுடன் இரு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண் குழந்தை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், ஆண் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் பாதிப்பு
சீனத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியூமோவைரஸ் என பெயரிடப்பட்டது.
நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தது.
எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படாத நிலையில், இந்தியாவிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.