பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்க வியாழக்கிழமை (ஜன.9) திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
‘பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ் தனியாா் நிறுவனம் வடிவமைத்தது.அந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த விண்கலன்கள் புவியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டு, அதன் தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக அவற்றை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கும் நிகழ்வை வியாழக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதற்கான முன்னேற்பாடாக புவி வட்டப் பாதையில் இரு விண்கலன்களுக்கும் இடையிலான தொலைவை 225 மீட்டராக குறைத்தபோது புறச்சூழல் காரணமாக அவற்றின் இயக்க வேகம் எதிா்பாா்த்ததை விடக் குறைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனால், ஒருங்கிணைப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் விண்கலன்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் அவசியம். இந்தத் திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் அமெரிக்காவைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும்.