போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.
இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எத்தியோப்பியா போன்ற நாடுகளைக் காட்டிலும் பின்னடைவில் இருக்கும், அதாவது உலக பட்டினிக் குறியீட்டில் 105வது இடத்தில் இருக்கும் இந்தியாவில்தான், தானியக் கிடங்கிலேயே 9 லட்சம் குவிண்டால் உணவு தானியம் கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநில பொது வழங்கல் துறை, கெட்டுப்போன தானியங்களை விற்க ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. இதன் மூலம் ஒரு பகுதி தானியத்தையாவது காப்பாற்ற முடியுமா என்று திட்டமிட்டுள்ளது. கெட்டுப்போன தானியத்தில் 90 சதவீதம் கோதுமை என்று தெரிய வந்துள்ளது. இப்படி ஒரு பகுதி தானியத்தை விற்றாலும் கூட, அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கால்நடைத் தீவனத்துக்கு, பறவைகள் தீவனத்துக்கு, தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கு என பல வகையாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுமாம்.
இதையடுத்து, கிடங்குகளில் அவ்வப்போது சோதனை நடத்தி தானியங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
இது ஒன்றும், மத்திய பிரதேசத்தில் புதிதல்ல என்றும் ஆண்டுதோறும் கெட்டுப்போன தானியங்கள் விற்பனை நடந்துவருவதாகவும் கிடங்கு நிர்வாகிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.