மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல்&டி தலைவர்!

90 மணிநேர வேலையை எல்&டி தலைவர் வலியுறுத்தியது பற்றி...
எஸ்.என். சுப்ரமணியன்
எஸ்.என். சுப்ரமணியன் Twitter | @larsentoubro
Published on
Updated on
2 min read

வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்று லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் வாரத்துக்கு 4 நாள்கள் வேலை என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு முன்வைத்தார்.

இவரின் கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிப்பது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியத்திடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஊழியர்களிடம் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாததற்கு வருத்தம் அடைகிறேன், ஞாயிறுகளிலும் அவர்களை வேலை வாங்க முடியும் என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்கிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

“வீட்டில் அமர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் எனது சீன நண்பர் கூறினார், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னேறும் என்றார். ஏனெனில் சீனாவில் வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்வதாகவும் அமெரிக்கர்கள் வெறும் 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.

நாமும் உலகின் முன்னணி நாடாக வளர வேண்டுமானால், வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

இந்த நிலையில், சுப்ரமணியனின் கருத்தை விமர்சித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவில்,

"வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.

தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் கெளதம் அதானி ஒரு நிகழ்ச்சியில் கடந்த மாதம் பேசுகையில், வேலை - வாழ்க்கை சமநிலை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒருவர் வீட்டில் 4 மணிநேரம் செலவிட்டால் மகிழ்ச்சி அடைவார், மற்றொருவர் 8 மணிநேரம் செலவிட வேண்டும். குடும்பத்துடன் 8 மணிநேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடிவிடுவார் எனத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வருவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com