போலி பங்கு வர்த்தக மோசடி: ரூ. 90 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி!

இணைய மோசடியில் ரூ. 90 லட்சத்தை இழந்த முன்னாள் நீதிபதி.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் போலி பங்கு வர்த்தக மோசடியில் ரூ. 90 லட்சத்தை இழந்துள்ளார்.

கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான சசிதரன் நம்பியார் கொச்சியின் எரூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சசிதரன் நம்பியார் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக வெளியான விளம்பரத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு மோசடி நபர்களால் உருவாக்கப்பட்ட ஆதித்யா பிர்லா என்ற பெயருள்ள போலி பங்கு வர்த்தக செயலியில் கணக்கைத் தொடங்கினார்.

மும்பையில் உள்ள பிரபல நிதி நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்தின் பெயரில் அந்த செயலி இருந்ததால் அவருக்கு அதுகுறித்து முதலில் சந்தேகம் எழவில்லை.

ஆதித்யா பிர்லா என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவில் அவரை இணைத்த மோசடி கும்பல், 850% லாபம் தருவதாகக் குறிப்பிடும் இணைய இணைப்பை அவருக்கு அனுப்பினர்.

அந்த இணைப்பில் கடந்த டிச. 2 முதல் டிச. 30 வரை ரூ. 90 லட்சம் வரை நீதிபதி நம்பியார் முதலீடு செய்தார். ஆனால் வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபமோ, முதலீடு செய்யப்பட்ட பணமோ அவருக்குத் திருப்பி தரப்படவில்லை.

இதுகுறித்து திருப்புனித்துரா காவல் நிலையத்தில் கடந்த ஜன. 5 அன்று அவர் புகாரளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக வர்ஷா சிங், அயனா ஜோசப் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அது அவர்களின் போலியான பெயர்கள் என்று தெரிய வந்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக கொச்சி சைபர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

"பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் விசாரணையைத் நடத்தி வருகிறோம். அவை, போலி வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மோசடி நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகள் விரைவில் முடக்கப்படும்" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளத்தில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இணைய மோசடியின் மூலம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட சுமார் 36,000 வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com