
மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 மீட்டராக குறைக்கப்பட்டிருந்த நிலையில், இன்ற இரண்டு விண்கலன்களும் டேக்கிங் செய்வது அதாவது இணைக்கும் முயற்சி வெற்றிபெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
220 கிலோ எடையுள்ள இரு விண்கலன்களை பரிசோதனை முயற்சியாக இணைக்கும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
அதன்படி, வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச. 30-ஆம் தேதி செலுத்தப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
அதன் பின்னா் அவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக சுற்றி வந்தன. இரு விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை 20 கிலோ மீட்டரில் இருந்து படிப்படியாக குறைத்து, இன்று அவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருப்பதால் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பத்தை மேற்கொண்ட நான்காவது நாடாக இந்தியா உலக அரங்கில் உருவெடுத்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்களுக்கு டாக்கிங் முறை முக்கியமானது என்பதால், அது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.