
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி கடந்த வாரம் (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் 6 ஆம் நாளான இன்று திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்டக் கூடாரங்களில் செக்டர் 5 பகுதியில் சிலிண்டர் வெடித்ததால் தொடர்ந்து பல கூடாரங்களுக்கு தீ பரவியதாகக் கூறப்படுகிறது. செக்டர் 20 வரை தீப்பிடித்ததால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பல பொருள்கள் எரிந்து சாம்பலானது. தீ பரவுவதாக தகவல் கிடைத்ததுவுடன் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை அங்கு பெரியளவில் பரவி புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள சாஸ்திரி பாலம் மற்றும் ரயில்வே பாலம் இடையேயுள்ள பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதுவரை 20 முதல் 25 கூடாரங்கள் கூடாரங்கள் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து வருவதால் தீ மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது.
தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைக்க முயற்சித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்ல காவல்துறையினரும் பேரிடர் மீட்புப் படையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.