ஷரோன் ராஜ் கொலை: குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!

ஷரோன் ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி கிரீஷ்மா
குற்றவாளி கிரீஷ்மா
Published on
Updated on
1 min read

கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், உறவினருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுளள்து.

2022ஆம் ஆண்டு, ஆயுர்வேத மருந்து என்று கூறி விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்குக் கொடுத்து கிரீஷ்மா கொலை செய்த சம்பவத்தில் இன்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலையின் பின்னணி?

காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, ஷரோன் ராஜ் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி கிரீஷ்மா வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். வீட்டுக்கு வந்த ஷரோனுக்கு அவரது காதலி, கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார். பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல், விசாரணையின்போது, கிரீஷ்மா இதற்கு முன்பே ஷரோனைக் கொலை செய்ய 5 முறை முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் அவரே வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

விறுவிறுப்பெடுத்த விசாரணை

ஷரோன் ராஜ் கொலை நடந்து 73 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரீஷ்மா, கொலை நடப்பதற்கு 10 மாதங்களுக்கும் மேலாக ஷரோனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி, கூகுளில் பல விஷயங்களைத் தேடி தனது திட்டத்தை வகுத்துள்ளார். இதில், கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமரன் நாயருக்கும் பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷரோன் ராஜை காதலித்து வந்த நிலையில், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலில் இருந்து விலக கிரீஷ்மா திட்டமிட்டும், அதற்கு ஷரோன் ஒப்புக் கொள்ளாததால், அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து முறை கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில்தான், இறுதியாக ஷரோன் ஆயுர்வேத மருந்து என்று சொல்லிக் கொடுத்த விஷத் தண்ணீரைக் குடித்து, இல்லாத காதலுக்காக உயிரை விட்டுள்ளார் ஷரோன் ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com