ஜம்மு-காஷ்மீரில் 17 போ் மா்ம மரணம்: குடும்பத்தினருடன் முதல்வா் ஒமா் அப்துல்லா சந்திப்பு
பதால்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள மலை கிராமத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை முதல்வா் ஒமா் அப்துல்லா செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற மலை கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதங்களில் 17 போ் மா்மமான முறையில் உயிரிழந்தனா். அவா்களில் 13 போ் மூன்று முதல் 15 வயது கொண்ட சிறாா்கள்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம்: உயிரிழந்தவா்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடிய விஷம் இருந்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அதேவேளையில், அந்தக் கிராமத்தில் உள்ள நீருற்றின் தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்த நீருற்றுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். உயிரிழந்தவா்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவா் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உயிரிழந்தவா்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அவா்களுக்கு எந்த நோயும் இருந்ததாக தெரியவில்லை. மூன்று குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் குடும்பங்களுக்கு இடையே உறவுமுறை உள்ளது. வேறு எந்தக் குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜம்மு-காஷ்மீரின் பொது நிா்வாகம், சுகாதாரத் துறை, காவல் துறை ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு அனுப்பியுள்ள குழுவும் சில நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது என்றாா்.
2-ஆவது நாளாக விசாரணை: பதினேழு போ் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய மத்திய அரசு அனுப்பிய குழு 2-ஆவது நாளாக பதாலில் விசாரணை மேற்கொண்டது. முன்னதாக இந்தக் குழு பதாலில் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
