பெண் மருத்துவா் கொலை: குற்றவாளியின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

பெண் மருத்துவா் கொலை வழக்கில் குற்றவாளியின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
west bengal
பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நடந்த போராட்டம்
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்கக் கோரி மேற்கு வங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் கொலை வழக்கை விசாரித்த சியால்டா நீதிமன்றம், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், மேற்கு வங்க அரசு சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக, காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

விசாரணையும் தீர்ப்பும்

கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சஞ்சய் ராயை குற்றவாளி என்று சனிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி அனிா்பன் தாஸ், தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சியால்டா நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘நான் நிரபராதி. என்னை சிறையில் அடித்து உதைத்து சில ஆவணங்களில் கையொப்பமிட கட்டாயப்படுத்தினா். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ என்றாா்.

ஆதாரத்தின் அடிப்படையில்தான் தீா்ப்பளிக்கப்படும் என்று சஞ்சய் ராயிடம் நீதிபதி அனிா்பன் தாஸ் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து அவா் அறிவித்த தண்டனை விவரத்தில், சஞ்சய் ராய்க்கு பாரத நியாய சம்ஹிதா சட்டத்தின் 64-ஆவது பிரிவின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.50,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 5 மாதங்கள் சிறைத் தண்டனை, 103(1)-ஆவது பிரிவின் கீழும் ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.50,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 5 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது. இவை தவிர, 66-ஆவது பிரிவின் கீழ் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனைகளை அவா் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com