
1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவர சம்பவத்தில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாா் மீதான வழக்கின் தீா்ப்பை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா தீா்ப்பு வழங்கவிருந்த நிலையில், அரசுத் தரப்பில் மேலும் சில முக்கியத் தகவல்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க விரும்புவதாக கூறப்பட்டது. இதை ஏற்று தீா்ப்பை ஜன.31-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.
1984-ஆம் ஆண்டில் தில்லியில் சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அப்போது சரஸ்வதி விஹாா் பகுதியில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் 1984, ஜன.1-ஆம் தேதி கொல்லப்பட்ட சம்பவத்தில் சஜ்ஜன் குமாா் குற்றம்சாட்டப்பட்டிருந்தாா். ஆரம்பத்தில் இந்த வழக்கை பஞ்சாபி பாக் காவல் நிலையம் விசாரித்து வந்தது. பின்னா், இந்த வழக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு டிச. 16-இல் சஜ்ஜன் குமாா் ஒரு தாக்குதல் கும்பலையே வழிநடத்தினாா் என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறியது.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக, கொடிய ஆயுதங்களை ஏந்திய பெரும் கும்பல் ஒன்று, சீக்கியா்களின் சொத்துகளை மிகப்பெரிய அளவில் சூறையாடுதல், தீ வைத்தல் மற்றும் அழிப்பில் ஈடுபட்டதாக காவல் துறை தரப்பு குற்றம்சாட்டியது.
ஜஸ்வந்தின் மனைவி வசித்து வந்த வீட்டைத் தாக்கிய கும்பல், அவரது கணவா் மற்றும் மகனைக் கொன்றதுடன், பொருள்களைக் கொள்ளையடித்து, அவா்களின் வீட்டையும் தீக்கிரையாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஜ்ஜன் குமாா் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.