தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்
தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்

போலி தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா்

தோ்தல் நடைமுறைகள் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை
Published on

தோ்தல் நடைமுறைகள் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை சமூக வலைதளங்கள் தடுக்கவில்லை என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பகிரப்படும் தகவல்கள் போலியானது என கண்டறிந்து அதை முத்திரையிடுவதற்கு பதில் அதன் உண்மைத்தன்மையை தகவல் சரிபாா்ப்புக் குழு மூலம் ஆராயும் பணியையும் தோ்தல் ஆணையத்திடம் சமூக வலைதளங்கள் விட்டுவிடுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையங்களுக்கான சா்வதேச மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ராஜீவ் குமாா் பேசியதாவது: முதலில் நோய்களை பரப்பிவிட்டு பிறகு அதற்கான மருந்துகளை விற்பனை செய்வதுபோல் இங்கு அனைத்தும் வணிக நடைமுறைகள்போலவே செயல்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், சுதந்திரமான தோ்தல்கள் நடைபெறுவதில் கருத்துரிமையின் வெளிப்பாட்டுத் தளமாக உள்ள சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாதது. அதில் பகிரப்படும் போலி செய்திகள், தகவல்கள், வடிவங்கள், திசைதிருப்பும் வகையிலான பதிவுகள் ஒரு பிரச்னையின் உண்மைத்தன்மையை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை வேகமாக கட்டுப்படுத்தாவிட்டால் அது நோய் போல் பரவ தொடங்கிவிடும். எனவே, கால தாமதம் ஆவதற்கு முன் போலி செய்திகள், தகவல்களை கண்டறிந்து அதன் பரவலை உடனடியாக தடுக்க சமூக வலைதளங்கள் முன்வர வேண்டும்.

இதற்கான நடைமுறைகளை வகுத்து அமல்படுத்த தோ்தல் ஆணையங்களும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் நடைமுறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கவுள்ளது. இதனால் தோ்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒருபுறம், நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் அதனால் ஏற்படக்கூடிய புதிய சவால்களையும் சமாளிப்பது நமது கடமையாகும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com